பள்ளிப்பருவத்திலே சித்திரம் வரைவதில் வாலி அவர்கள் மிகவும் முனைப்பாக இருந்தாராம். அப்போதைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஒவியத்தில் கரை தேர்ந்து இருந்தவர் ஓவியர் “மாலி”. அவரது தீவிரமான ரசிகரான இவருக்கு, பள்ளித் தோழன் பாபு என்பவன் ” வாலி ” என்னும் பெயர் சூட்டி ஓவியத்தில் மாலியைப் போலவே நீயும் ஒரு கலக்கு கலக்குவாய் என்று வாழ்த்தினானாம்.
அப்போது அவர் பாரதியாரின் ஒவியம் ஒன்றை வரைந்து அதன் கீழ் வாலி என்று கையொப்பமிட்டு அதைத் தனது தமிழ் வாத்தியாரிடம் காட்டினாராம். அதைப் பார்த்துப் பாராட்டிய தமிழ் வாத்தியார் “உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலி என்று பெயர் சூட்டினாய்?” என்று கேட்டாராம். அதைக் கேட்ட சுற்றி நின்ற மாணவர்கள் சிரித்து விட்டார்களாம். அப்போது ஒரு துண்டுக் காகிதத்தில் பின்வருமாறு எழுதி தமிழ் வாத்தியாரிடம் கொடுத்தாராம் நம்ம வாலி.
“வாலில்லை என்பதனால்
வாலியாகக் கூடாதா?
காலில்லை என்பதனால்
கடிகாரம் ஓடாதா?”
என்னவொரு நெத்தியடியான பதில் பாருங்கள் !
தகவல் : சக்தி, நன்றி : அன்புடன் குழுமம்