
1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.
அப்போது “ஒளிவிளக்கு” படத்தில் வாலி எழுதியிருந்த “இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு” என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.
எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்கிறார் கவிஞர் வாலி. திருமதி ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, ஆறுதல் சொன்னார் கவிஞர்.
“உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை” என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க வாலியிடம் கூறினாராம்.
“என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும், அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்” என்று சமயோசிதமாக பதில் கூறினாராம் நம் கவிஞர்.