Archive for the ‘வாலியின் இடைவேளை’ Category

வாலியின் இடைவேளை

– அப்துல் கையூம்

கா.மு.ஷெரீப்பின் பாடல்களை எப்படி மருதகாசியின் பாடல்கள் என்று தவறாகப் புரிந்துக்கொண்டோமோ அதுபோன்று கண்ணதாசனின் பாடல்கள் பலவற்றை வாலியின் பாடல்கள் என்று பலரும் குழப்பிக் கொண்டது உண்மைதான்.

தொடக்க காலத்தில் வாலியிடமிருந்த ‘இலைமறைகாய்’ போக்கு; பிற்காலத்தில் ‘சக்கரைவல்லிக் கிழங்கு’ போன்ற பாடல்களில் அவர் சறுக்கி விழுந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. சாதாரண சறுக்கல் அல்ல. பயங்கரமான சறுக்கல்.

கண்ணாதாசன் கோலோச்சிய காலத்தில் அரசியலில் அங்கும் இங்கும் தன் மூக்கை நுழைத்து, எம்.ஜி.ஆர். போன்றவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால்.  வாலி போன்றவர்கள் திரைத்துறையில் நுழைத்ந்திருக்கவே முடியாது. இதுவும் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை.

கண்ணதாசனே இன்னும் மேலும் பலகாலம் One Man Show- வாக தனது ராஜாங்கத்தை ‘ஓஹோ’ என்று நடத்தியிருப்பார்.

“இடைவேளை”  என்ற என் கட்டுரையில் இடை வருணனையை எத்தனை நளினமாக கையாண்டுள்ளார் என்பதனை விரிவாக எழுதியிருந்தேன்.

“ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை”

என்ற பாடல் வாலியின் பிரபலமான பாடல்.

“கலை அன்னம் போல் ஒரு தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
சிலை வண்ணம்போல் அவள் தோற்றம்
இதழில் மதுவோ குறையாது”

கண்ணதாசன் கூறிய அதே “இல்லையென்று சொல்லுமுந்தன் இடையல்லவா” செய்தியினை வேறு பாணியில் சொல்லியிருப்பார் வாலி.

மற்றொரு பாடல்; இரு முன்னால் முதலமைச்சர்கள் இணைந்து ஆடும் பாடல்:

“நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை வயது”

என்ற இனிமையான பாடல்.

“இந்த நூலாடிச் செல்ல செல்ல ஆஹா!
அந்த மேலாடை மூடிக் கொள்ள ஓஹோ!
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன?
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன!”

என்னமாய் ஒரு கற்பனை பாருங்கள்!  நூலிடை கொண்ட அந்த அந்த பூமேனியாள் மேலாடை மூடிச் செல்ல; சொல்லித் தீராத இன்பங்கள் பிறக்கின்றனவாம்.

“குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வர வேண்டும்”

என்ற இன்னுமொரு வாலியின் பாடலினை ஆராய்வோம்

நாயகன்:
“பூவை என்பதோர் பூவைக் கண்டதும்
தேவை தேவை என்று வருவேன்!”

‘பூவை’ என்ற வார்த்தையை வைத்து விளையாடி இருப்பது அவரது புலமையினைக் காட்டுகின்றது.

நாயகி:
இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க
அன்பு உன்னைக் கேட்டு நான் தருவேன்”

நாயகியின் இடையைக் கண்ட மின்னல் அவளிடத்தில் வந்து கேட்கிறதாம்.

“நான்தான் பிறர் கண்கள் கூச; ஜாலங்கள் புரியும் வண்ணம் வெட்டுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீ என்னை விட நன்றாக வெட்டுகிறாயே. ப்ளீஸ்.. எனக்கு அதை சற்று இரவல் கொடுக்க மாட்டாயா?” என்று கெஞ்சுகிறதாம்.

அன்னப் பறவை சும்மா இருக்குமா? அதன் நடையை புகழாத கவிஞனே இல்லை என்று கூறலாம். அப்படியொரு பதுசான நடை கொண்ட அன்னமானது இவளிடத்தில் வந்து “தயவுச் செய்து உன் நடையழகை எனக்கும் கொஞ்சம்  சொல்லிக் கொடுக்க மாட்டாயா?” என்று அடம்பிடிக்கிறதாம்.  ஆனால் நாயகி இவையெல்லாவற்றையும் பகிர்ந்து கொடுத்து விடுவாளா? ஊஹூம்..  உரியவனிடம் கேட்டுத்தானே கொடுக்க வேண்டும்?

இதற்கு அடுத்த அடிதான் மாஸ்டர்பீஸ்.

நாயகன்:
“கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன
ஒருநாளும் அழகு குறையாது”

இப்போது அந்த இடைக்கு சொந்தக்காரனே பெர்மிஷன் கொடுத்து விடுகிறான். “நோ ப்ராப்ளம்” கொடுத்து விடு. அது அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி. அதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போதில்லை என்று ஆறுதல் வழங்குகிறான். எப்படி இருக்கிறது இந்த கற்பனை?? வாலியின் புலமைக்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டுதான்

 “ மணிக்குடஞ் சுமக்கின்ற தென்னக் குழைந்த நுண்ணிடை” என்று கவிக்கம்பன் எழுதியிருப்பதாக எடுத்துரைத்தேனே அதுபோன்று வாலியும் “தேன்கனிகள் தாங்கிவரும் பூங்கொடி”  என்று எழுதியிருக்கிறார்.

“பவளமெனும் விரல் நகமும்
பசுந்தளிர்போல் வளைக்கரமும்
தேன்கனிகள் இருபுறமும்
தாங்கிவரும் பூங்கொடியோ!”

என்ற வரிகள் நல்ல உதாரணம். படப்பாடல்களில் தான் இப்படி என்றில்லை. கண்ணாதாசனைப் போன்று தனிப்பாடல்களிலும் “இடை” சமாச்சாரங்களில் மனுஷர் பூந்து விளையாடி இருக்கிறார்.

“என் விழிகளே விரல்களாக நீண்டு
உன் இடுப்பு மடிப்புக்களை
வருட நினக்கும்போது
உன் மேனி வீட்டை
முந்தானைக் கதவால்
மூடிக் கொள்கிறாயே
தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து
திறக்கச் சொல்ல மாட்டேனோ?”

இதுவும் “பொய்க்கால் குதிரைகள்” என்ற கவிதைத் தொகுப்பில் சாட்சாத் வாலி எழுதிய வரிகளேதான். வாலியிடத்தில் எனக்கொரு பிடித்த குணம் அவரது வெளிப்படத்தன்மை + அவையடக்கம்.

நானிடறி வீழ்ந்த இடம்
நாலா யிரம்அதிலும்
நான்போட்ட முட்கள்பதியும்
நடைபாதை வணிகனென
நான்கூறி விற்றபொருள்
நல்லபொருள் இல்லை அதிகம்

என்று கண்ணதாசன் கூறுவான். இதற்கு என்ன அர்த்தம் என்றால் இவ்வளவு கருத்தாழமிக்க பாடல்களை கொடுத்த நான்தான் “எலந்தப்பழம்”  போன்ற பாடலையும் எழுதினேன் என்ற வாக்குமூலம்.

ஒருசமயம் காலஞ்சென்ற கவிஞர் திருலோக சீத்தாராம் அவர்கள் வாலியை  கவிஞர் ச.து. சுப்ரமண்ய யோகியாரிடமும் திரு கி.வா.ஜ. அவர்களிடமும் அறிமுகப்படுத்தினார். அப்போது

“வாசித்துத் தமிழ் கற்றோர்
வரிசையிலே யானுமில்லை
யோசித்துக் கவிபுனையும்
யோக்கியதை தானுமில்லை
நேசித்தேன் நெஞ்சாறப்
பூசித்தேன் நின்னடியில்
யாசித்தேன் அடடாவோ
யானும் ஓர்கவியானேன்”

என்ற வெளிப்படையாகவும் அவையடக்கத்துடனும் என்று பாடினாராம்.

அதெல்லாம் சரி. வயசாக ஆக, பக்குவதுடனும் நாகரிகத்துடனும் எழுதுவார் என்று பார்த்தால் இப்படி “வால் பையனாக” மாறி தரம் குறைந்து பச்சையாக எழுதினால்
யாருக்குத்தான் ஆத்திரம் வராது?.

இப்படி நாம் இணையத்தில் அவரை தாறுமாறாக விமர்சிப்பது அவரது பார்வையில் பட்டு திருந்தி பழையபடி நல்ல கவிதைகளை தர மாட்டாரா என்ற ஆதங்கம்தான்
வேறென்ன?