Archive for the ‘புகழாரம்’ Category

சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கும். அதை தீர்மானிப்பவன் இறைவன்தான். ‘உனக்கு பாட்டு எழுத வராது; ஊரில் நிலம் இருந்தா போயி விவசாயம் பண்ணு’ என்று என்னை விரட்டியவர் எம்.எஸ்.விசுவநாதன். பிறகு அவர் இசையில் 3 ஆயிரம் பாடல்களை எழுதினேன்.

‘சந்திரலேகா’ படத்தில் ராஜாவின் செருப்பை எடுத்து வைக்கும் வேலையாள் வேடம் கூட மறுக்கப்பட்ட சிவாஜி கணேசன் பிற்காலத்தில் நடிகர் திலகமாக வளர்ந்தார். இப்படி சினிமாவில் ஜெயிக்க காலம் நேரம் கூடி வரவேண்டும்.

சில இயக்குனர்கள் நான் நினைத்தது வரவில்லை என்பார்கள். ஒரு இயக்குனர் ‘கன்னம்’ என்ற சொல்லுக்கு எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றார். ‘கன்னம்’ என்பதே எளிமையானது தான் என்று சொல்லிப்பார்த்தேன். அவர் கேட்கவில்லை. கவிஞர் அப்துல்ரகுமானிடம் இதை கூறினேன். ‘கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியதுதானே’ என்றார்.

– விழாவொன்றில் கவிஞர் வாலி

பிகர் & ஷுகர்

karunadidhi

நிஜம் சொன்னால் ரஜினியைவிட நீயொரு வசீகரமான ஃபிகர். நாவினிக்க உன்னைப் பாடியே என் உடம்பில் ஏறிப்போனது ஷுகர்

-கருணாநிதியைப்பாராட்டி கவிஞர் வாலி

vaali 1

“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!”

– கவிஞர் வாலி அவர்கள் தன் பள்ளிப் பருவத்தில் எழுதிய வைர வரிகள்!

எங்கே போய்விடும் காலம்?

vaali

1965 – ஆம் ஆண்டு எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டது. அவரது படங்களுக்கு பாட்டெழுத என்னை  அழைக்கவில்லை. காரணம், அவர் தலைமையில் என் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால், அவருக்குத் தெரியாமல் திடீரென நான் திருமணம் செய்துகொண்டேன். அதனால் அவருக்கு என்மீது வருத்தம்.

பிறகு நாங்கள் சமாதானமாகி விட்டோம். அவரும் நானும் தாழம்பூ படத்தில் இணைந்தோம். அதில் அவருக்கு நான் எழுதிய பாடல், ‘எங்கே போய்விடும் காலம். அது என்னையும் வாழ வைக்கும்’

– கவிஞர் வாலி

இளநீர் !!

images

கவிஞர் வாலி திருச்சி வானொலி நிலையத்தில் பணி புரிந்துக் கொண்டிருந்தபோது ஒரு கவிதை எழுதினாராம்.

தன் தலையைச்
சீவியவனுக்கே !
தண்ணீர் தருகிறது
இளநீர் !!

கவிஞர் வாலி

“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!”
– கவிஞர் வாலி அவர்கள் தன் பள்ளிப் பருவத்தில் எழுதிய வைர வரிகள்!
—————————————————
தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு திருவரங்கம் என்னும் திருத்தலம் பல நன்முத்துக்களைப்
பரிசாகக் கொடுத்துள்ளது. அதில் முதன்மையான பரிசு ‘வாலி’ என்னும் இரண்டெழுத்துப்
பெயரைக் கொண்ட கவிஞர். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!

ஒரே பாட்டில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர்.
படித்தவன்முதல் பாமரன்வரை அந்தப் பாட்டில் தன்னைப் பறிகொடுத்திருக்காதவனே
கிடையாது. அந்தப் பாடல் இடம் பெற்ற படகோட்டி என்னும் திரைப்படம் புரட்சித்
தலைவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் படம் என்பதால் வெற்றி பெற்றது என்பதை
விட வாலியின் பாடல்களால் அசைக்க முடியாத ஒரு மாபெரும் வெற்றியைப்
பெற்றது என்பதுதான் சிறப்பு! அதுதான் உண்மை கூட!

என்ன பாடல் அது என்கிறீர்களா? கொடுத்துள்ளேன் பாருங்கள்:

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் –
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் –
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!

படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன்மேல் பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒருபோதும் தெய்வம் பொறுத்ததில்லை!

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்;
மடிநிறையப் பொருளிருக்கும் –
மனம்நிறைய இருளிருக்கும்!
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து –
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்!
-படம் படகோட்டி (வருடம் 1964)

இறைவன் கருணை வடிவானவன். பேதமில்லாதவன்

“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல!”. என்று வள்ளுவப் பெருந்தகை
சொல்லியதுபோல இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன்
அவன் படைத்த அனைத்துமே பொதுவானதுதான்.
வானம், நீர், நெருப்பு, காற்று என்று அனைத்துமே
பொதுவானதுதான்.

ஏழைக்கு ஒரு காற்று பணக்காரனுக்கு ஒரு காற்று என்று
இரண்டு விதமான காற்று கிடையாது. ஒளியிலும் இரண்டு விதமான
ஒளி கிடையாது. அதைக் கவிஞர் எவ்வளவு சிறப்பாகச் சொன்னார்
பார்த்தீர்களா?

”மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?”
என்று இரண்டே வரிகளில் இறைவனின் நிலைப்பாட்டைப் புரிய
வைத்தார் அல்லவா?

இங்கே நிகழும் அவலங்கள் யாவிற்கும் சகமனிதனே காரணம்.
உழைத்தவர்கள் தெருவில் நிற்பதற்கும், மடி நிறையப் பொருள் இருப்பவனின்
மனதில் இருள் இருப்பதற்கும் யார் காரணம்? கடவுளை எப்படிக் குறை
சொல்ல முடியும்?

பாடலில் எதுகையும், மோனையும், எளிய சொற்களும் மனதில் பதியும் விதமாக
அமைந்திருப்பதை நினைவில் வையுங்கள். அதனால்தான் இந்தப் பாடல்
கேட்ட அத்தனை உள்ளங்களிலும் சென்றமர்ந்துவிட்டது!
——————————————–
பேசும் படம் பிறந்த 1931ஆம் ஆண்டில்தான் கவிஞர் வாலியும் பிறந்தார்.
இயற்பெயர் திரு.ரங்கராஜன்.

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவரங்க மண்ணில்தான். சிறு வயதில்
குடித்ததெல்லாம் காவிரி ஆற்றுத் தண்ணீர்! படித்ததெல்லாம் பாசுரங்கள்!
திருவரங்கத்தில் பிறந்திருந்தாலும் கொண்ட காதலெல்லாம் அருகில் இருந்த
ஆனைக்காமேல்தான். ஆமாம் திருவானைக்கோவில் மீதுதான்.

காளமேகத்துக்குப் பிறகு ஆனைக்கா அகிலாண்டேஷ்வரியின் பார்வை
இவரின் மேல் விழுந்தது. தினமும் சுற்றி வருகிறானே பையன் என்று
தமிழை வசப்படுத்திக் கொடுத்தாள்.

அதை வாலி அவர்களும் மறக்காமல் மனதில் வைத்திருந்து, பின்னொரு
நாளில் பாட்டரங்கம் ஒன்றில் கவிதை வரிகளால் அகிலாண்டேஷ்வரிக்குத்
தன் நன்றியைச் சமர்பித்தார்.

“ஆனைக்கா அம்பிகையின்
அடியொற்றிப் பாட்டிசைத்தால்
மோனைக்கா பஞ்சமுண்டு?
முற்றெதுகை முதலான
சேனைக்கா பஞ்சமுண்டு?
சூழ்கொண்ட செந்தமிழின்
சோனைக்கா பஞ்சமுண்டு?
சுடர்கவிதை துளிர்க்காதோ?”

அதேபோல தான்பாடிய கவியரங்கங்களில், வாலி அவர்கள் தன்னை
நன்கு வளர்த்து ஆளாக்கிய தமிழன்னைக்குச் சிறப்புச்செய்து நன்றி
பாராட்டும் முகமாகக் கீழ்க்கண்ட வரிகளைச் சொல்வார்.

“கொடிவருடிப் பூந்தென்றல்
குலவுகின்ற தென்பொதிகை
மடிவருடிப் பூத்தவளே!
மணித்தமிழே! மாற்றாரின்
அடிதிருடிப் பாடாமல்
அம்மா!நின் அரவிந்த
அடிவருடிப்பாட என்னை
ஆளாக்கி வைத்தனையே!”

தமிழ் அன்னையின் அரவிந்த அடிகளுக்கு இதைவிடச் சிறப்புச்
செய்ய யாரால் முடியும்?
————————————————————————-
தமிழ் வசப்பட்டவுடன் வாலியும் சும்மா இருக்கவில்லை. தன் நண்பர்களைச்
சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத்
துவக்கினார்.

முதல் பிரதியை வெளியிட்டவர் யாரென்று நினைக்கிறீர்கள்? கேட்டால்
அசந்து போவீர்கள். எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்?

அந்தக் காலத்தில் மிகப் பெரிய எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளராக
இருந்த திருவாளர் கல்கி அவர்கள்தான் அந்தப் பத்திரிக்கையை வெளியிட்டுச்
சிறப்பித்ததோடு, வாலியின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையையும்
கொடுத்துவிட்டுப் போனார். தன் கதைகளைப் பல திருப்புமுனைகளோடு
கொண்டு செல்லும் அவர், வாலியின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையை
ஏற்படுத்தியது அதிசயமா அல்லது தெய்வாதீனமா என்றால் இரண்டையும்
வைத்துக் கொள்ளலாம்.

அன்று திரு.கல்கி அவர்களுடன் திருவாளர் சின்ன அண்ணாமலை அவர்களும்
திருச்சி வானொலி நிலைய அதிகாரி திரு.பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால்
அடுத்து ஒரு ஏற்றம் வாலியின் வாழ்வில் நிகழ்ந்தது. வானொலிக்கு கதைகள்
நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைக்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில்
பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப் பங்கேற்று கொண்டவர்
களில் ஒருவர்தான் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளராகத் தன் தனித்
தமிழ் நடையால் ராஜ நடைபோட்ட எழுத்தாளர் சுஜாதா! அவரின் இயற்பெயரும்
ரங்கராஜன்தான் என்பது வியப்பிற்குரிய விஷயம்!

சரி, நமது ரங்கராஜன் எப்படி வாலியானார்?

அது ஒரு சுவையான கதை. வாலிக்கு எப்படி தமிழின் மேல் ஒரு தீராத
பற்று இருந்ததோ அதேபோல ஒவியத்தின் மீதும் ஒரு கண் இருந்தது.
நன்றாகப் படம் வரையும் திறமை இருந்தது. அந்தக் காலகட்டத்தில்
ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த திரு.மாலி
அவர்களைப் போலவே தானும் தமிழ்கூறும் நல்லுலகத்தை ஒரு கலக்குக்
கலக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவரிடம் அவருடைய பள்ளித்
தோழன் பாபுதான் ‘மாலி’யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக
வரவேண்டும் என்றுகூறி ‘வாலி’ என்னும் பெயரைச் சூட்டினான்.
பள்ளிக்கூட வட்டாரத்தில் வாலி என்னும் பெயர் பரவிப் பலரையும்
சுழற்றி அடித்தது. அதாவது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது

ஒருமுறை வாலியென்ற கையொப்பமுடன் வாலி வரைந்த பாரதியின்
படத்தை வாங்கிப் பார்த்த தமிழ் வாத்தியார், படத்தைப் பாராட்டியதோடு
நக்கலாக வேறொன்றையும் சொன்னார்.

“உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலின்னு பேர் வெச்சுக்கிட்டே?”

அதைக் கேட்டு சுற்றி நின்ற மாணவர்கள் சிரிக்க, வாலி ஒரு துண்டுச் சீட்டில்
இப்படிப் பதில் எழுதிக் கொடுத்தார்.

“வாலில்லை என்பதனால்
வாலியாகக் கூடாதா?
காலில்லை என்பதனால்
கடிகாரம் ஓடாதா?”

என்னவொரு நெத்தியடியான பதில் பாருங்கள்!
————————————————————————-
வாலி அவர்கள் எழுதிய பாடல்களில் என் மனம் கவர்ந்த பாடல்கள்
ஒரு நூறுக்கும் மேல் உள்ளன. இடம், பதிவின் நீளம், மற்றும் உங்களுடைய
பொன்னான நேரம் கருதி அவற்றையெல்லாம் குறிப்பிடவில்லை. பின்னொரு
சந்தர்ப்பத்தில் அவற்றை ஒரு தொடராக எழுதலாம் என்றுள்ளேன். அதுவரை
பொறுத்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்,
SP.VR.சுப்பையா

நன்றி : தேவக்கோட்டை வலைப்பதிவு