by ராஜராஜன் ராஜமகேந்திரன்
காவிய கவிஞர் வாலி ஜூலை 18 ம் தேதி மறைந்து விட்டார். P.B . ஸ்ரீநிவாஸ், T.M . சௌந்தர்ராஜன், இப்போது வாலி… தமிழ் சினிமா உலகில் இவர்கள் ஜாம்பவான்கள் என்பதில் மாற்று கருத்தே இருக்கமுடியாது!
இவர்களின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு தான்!
காவியக்கவிஞர், வாலிப க்கவிஞர் வாலியின் மறைவுக்கு முகநூல்,இணையத்தில் குவிந்த இரங்கல்கள் அவர் ரசிகர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார் என்பதையே காட்டுகிறது!
தனிப்பட்ட விதத்தில் எனக்கு வாலியின் மறைவு மிகவும் வருத்தத்தை தருகிறது. என் காலத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் அவர். திரையிசை பாடல்களை தாண்டி தமிழ் இலக்கியத்திற்கும் அவரது பங்களிப்பு முக்கியமானது.
சில வருடங்களுக்கு முன்பு விகடனில் “நினைவு நாடாக்கள்” என்னும் தொடர் கட்டுரையை எழுதி வந்தார். அவரது மனதுக்கு பட்டதை சமரசம் இல்லாமல் எழுதினார் என்று கூறவேண்டும். வாலியை பற்றிய பிம்பம் தெளிவாக பலருக்கு தெரிந்தது என்று தான் கூறவேண்டும். சிலருக்கு அதிர்ச்சி, சிலருக்கு ஆச்சரியம்.
உதாரணத்திற்கு, கவியரசர் கண்ணதாசனுக்கும் அவருக்கும் உண்டான ஆரோக்கியமான நட்பை அழகாக சொல்லி இருந்தார். தொழில் முறையில் போட்டி இருந்தாலும் திரை மறைவில் இவர்கள் தங்களது நட்பை கொண்டாடி இருந்தனர். கருத்து ரீதியில் சண்டை இருந்தாலும், அன்பு ரீதியில் ஒருவொருக்கொருவர் மரியாதை வைத்து இருந்தனர் என்பது வாலியின் மூலம் தெரிந்தது. நினைவு நாடாக்கள் என்னால் மறக்க முடியாது. இப்போது புத்தக வடிவிலும் கிடைக்கிறது!
பல அந்தரங்க தகவல்களை பகிரங்கமாக கூறி இருந்தார். பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் அவை. உதாரணதிற்கு ஒரு விலை மாதுவுடன் இருக்கும் போது, கண்ணதாசனின் நண்பர் ஒருவர், வாலி உங்களுக்கு போட்டியாக வளர்ந்து வருகிறாரே அவரை இப்போது மாட்டிவிடுங்கள் என கூறினாராம். கண்ணதாசன் அதற்கு, அவன் என்னை நம்பி வந்து இருக்கிறான், அவனை மாறிவிட சொல்கிறாயே என கடிந்து கொண்டாராம்.
கண்ணதாசன் நினைத்து இருந்தால் என்னை வளர விடாமல் செய்து இருக்கமுடியும் என சொல்லுவதற்கு தான் இந்த மேற்கூறிய செய்தியை வாலி எழுதி இருந்தார். ஆனால், இதை படித்த பலருக்கு பெரும் அதிர்ச்சி. ஏன் இதை எழுதினார் என்பதற்கான பதிலை ஒரு மேடையில் வாலியே கூறினார். நானும் அந்த கூட்டத்தில் இருந்தது என் பாக்கியம்!
எழுத்தாளர் சாரு நிவேதிதாவை பாராட்டி நினைவு நாடக்களில் வாலி எழுதி இருந்தார். அவரது புத்தகங்களை படித்ததாகவும் அவரது உலகளாவிய அனுபவங்களும் எழுத்தும் தன்னை ஈர்த்ததாகவும் கூறி இருந்தார்.
சாருவின் ‘எக்ஸ்சைல்’ நாவலின் வெளியீடு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வாலி அழைக்கப்பட்டு இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்று இருந்தேன்.
வாலி பேசும் போது, நான் விகடனில் தன்னுடைய கடந்த காலத்தை பற்றி எழுதி இருந்தேன். அதில் கூறிய சில விசயங்களை படித்து விட்டு, பலர் என்னை தொடர்புகொண்டு ஏன் இப்படி எழுதினீர்கள் என கேட்டார்கள். என் வயதிற்கு நான் பொய் சொல்ல கூடாது என்றார்!
மகாத்மா காந்திக்கு சத்தியசோதனை எழுத வந்த தைரியம் எனக்கு வந்தால் நானும் சுயசரிதை எழுதுவேன் என்று ரஜினி கூறி இருந்தாரே…அந்த தைரியம் வாலிக்கு உண்டு என்பதை உணர்ந்தேன்!
வாலியின் பாடல்களை பற்றி:
வாலியின் பாடல்களை பற்றி நினைக்கும் போது, சரஸ்வதி அவரது பேனாவில் குடி இருக்கிறார் என்று தான் எனக்கு தோன்றும்.
இந்த வரிகளை பாருங்கள்..
நாட்குறிப்பில் நூறு தடவை
உன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா...
கண்ணதாசனும் வாலியும்:
வாலியின் பல பாடல்கள் கண்ணதாசன் எழுதியதாக நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். இதைப்பற்றி வாலியும் கவலை பட்டதாக தெரியவில்லை.
உங்கள் எழுத்து கண்ணதாசனை போலவே இருக்கிறதே என்று கேட்டபோது, தங்கத்தோடு தானே ஒப்பிடுகிறார்கள், தகரத்தோடு இல்லையே என்று கூறியவர் வாலி.
கற்பகம் திரைபடத்தில் இடம்பெற்ற பக்கத்துக்கு வீட்டு பருவ மச்சான் என்ற பாடலை வாலி எழுதிய பின், அதை படித்த கண்ணதாசன் வாலியை தன் கலையுலக வாரிசு என்று அறிவித்தார். சுசீலாவின் மயக்கும் குரலில் இந்த பாடலை கேட்டுபாருங்கள்!
எம். எஸ். வியும் வாலியும்:
எம். எஸ். விஸ்வநாதன் இல்லையென்றால் இந்த வாலி இல்லை என்று கூறுபவர். ஆரம்ப காலத்தில் வறுமையின் பிடியில் இருந்தவரை உயர்த்தி கொண்டு வந்தது எம். எஸ். வி என நம்புவர் வாலி. இவர்கள் கூட்டணியில் வந்த பாடல்கள் அத்தனையும் ஹிட் என்பதில் ஐயமில்லை.
சோற்றுக்காக பாட்டு வரி எழுதி கொண்டிருந்த நான்
எம். எஸ். வி யுடன் சேர்ந்த பிறகு தான் வருமான வரி கட்ட ஆரம்பித்தேன் என்று கூறுவார்!
வாலியும் எம்.ஜி. ஆரும்:
எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களுக்கு பாடல்கள் புனைந்தவர் வாலிதான். தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, நல்ல பேரை வாங்க வேண்டும் போன்ற எண்ணற்ற கொள்கைப் பாடல்களைத் தந்தார் வாலி. எம்ஜிஆரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களில் எது கவியரசர் கண்ணதாசன் எழுதியது, எது வாலி எழுதியது என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு இருக்கும்.
கண்போன போக்கிலே கால் போகலாமா.. கால் போன போக்கிலே மனம் போகலாமா என்ற பாடலை எம்ஜிஆருக்காக பணம் படைத்தவன் படத்தில் படைத்தவர் வாலிதான். அதில் வரும் வரிகள்.. “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்..” – இந்த வரிகளை மெய்ப்பிக்கவே எம்ஜிஆர் வாழ்ந்தது போல அமைந்தது அவர் வாழ்க்கை. கவிஞரின் வாக்கு சாதாரணமானதா என்ன!
வாலியும் இளையராஜாவும்:
இளையராஜாவிற்கு நிறைய பாடல்களை எழுதிய பெருமை வாலியை தான் சேரும் என நினைக்கிறேன். கண்ணதாசனின் மறைவு, வைரமுத்துவிடம் கருத்து வேறுபாடு என ராஜா இருக்கும் போது, இன்னொரு மாற்று சக்தியை வாலி இருந்தார் என நினைக்கிறேன். இவர்கள் கூட்டணியில் அத்தனை பாடல்களும் மனதில் நீங்கா இடம் பெற்றவைகளாக இருக்கும். மௌனராகம், தளபதி, அஞ்சலி என சூப்பர் ஹிட் திரைப்படங்கள் நிறைய சொல்லலாம்.
தந்தனா தந்தா னன தானா என மெட்டை கூறியதும் இந்தா பிடிச்சிக்கோ “சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சொல்லடி இந்நாள் நல்ல தேதி” என இன்ஸ்டன்ட் பாட்டு எழுதும் திறமை வாலிக்கு உண்டு என ராஜா ஒரு மேடையில் கூறினார்.
வாலியும் ரஜினியும்:
ரஜினிக்கு நிறைய பாடல்கள் எழுதி இருந்தாலும், காலத்தால் அழிக்க முடியாத ஒரு பாடலான “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” பாடலை எழுதியவர் வாலி தான். ரஜினி ஒரு மேடையில், இந்த ஒரு பாட்டு காலம் முழுக்க எனக்கு போதும் என கூறினார்.
பாபா படத்திற்கு அவர் எழுதிய ராஜ்யமா இல்லை இமயமா பாடலில்
“திருமகன் வருகிறான் திருநீரை நெற்றி எங்கும் தினம் பூசி, அதிசயம் அதிசயம் பெரியார் தான் ஆனெதென்ன ராஜாஜி “
என எழுதினார். பெரியாரும் ராஜாஜியும் நண்பர்கள் ஆனால் கொள்கையில் நேர் எதிர். பெரியார்வாதிகள் இந்த வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வாலி, அதற்கு தான் அதிசயம் அதிசயம் என இரண்டு முறை போட்டு இருக்கிறேன் என்றார்!
வாலியும் ரகுமானும்:
ரகுமானிற்கு ஆரம்ப காலத்தில் இருந்து பாடல்களை எழுதி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்…
காதல் தேசத்தில் ‘எனை காணவில்லையே நேற்றோடு’ மறக்க முடியாத ஒரு பாடல்.. இப்பாடலில் ‘மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்’ என்று எழுதி இருப்பார். இதைதான் வைரமுத்து பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர்வாழ்வேன் என்று கடன் வாங்கி எழுதி இருப்பார்.
ரகுமானிற்கு பல படங்கள், பாடல்கள் எழுதி இருந்தாலும் இரண்டு இயக்குனர்களின் படங்கள் வாலியின் முத்திரையை தனித்து காடும். ஒன்று இயக்குனர் கதிர் (காதல் தேசம், காதலர் தினம்,..) எஸ். ஜே சூர்யா (நியு, அன்பே ஆருயிரே). நியு படத்தின் ‘தொட்டால் பூ மலரும்’ ரீமகிற்கு எம்.ஜி ஆரின் ஆவி ரகுமானை மேல் இருந்து வாழ்த்தும் என மேடையில் பாராட்டினார்.
அன்பே ஆருயிரேவில் ஒரு பாடல் உண்டு… தடா தடா தடா ஆட ஆட ஆட வென்று… வார்த்தைகளில் விளையாடி இருப்பார் வாலி.
அடி அடி முதலடி அமைஞ்ச
அந்த அடி தான் பல்லவிடா
நீ படி படியா அத படிச்சிடடா
முழு பாட்டையும் புரிஞ்சுக்கடா
அங்கம் தங்கம் மிருதங்கம்
வச்சிப்பாரு கச்சேரி
மெல்ல தான் மெல்ல தானே
மெத்தை தான் கட்ட தானே
அவரின் முதுமை பொய் என்று ஒவ்வொரு பாடலுக்கும் நிருபிக்கும் வழக்கம் அவருக்கு உண்டு… இப்பாடலை முடிந்தால் கேட்டுபாருங்கள்…
மற்றுமொரு மறக்கமுடியாத பாடல் ஜில்லென்று ஒரு காதல் திரைப்படத்தில் ‘முன்பே வா என் அன்பே வா’..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்… வாலியின் பாட்டுக்கு ரகுமான் வாலியின் வீட்டுக்கு சென்று வாங்கி வருவதை கடந்த சில வருடங்களாக வழக்கமாய் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாலியும் வாலிபமும்:
வாலியை வாலிப கவிஞர் என்று கூறுவது ஏன் என்று உங்களுக்கு விளக்க தேவையில்லை. ஆனால், ஆபாசமாக பாட்டுக்களை எழுதினார் என்று ஒரு குற்றசாட்டு உண்டு. உதாரணத்திற்கு இந்து, சூரியன் என சில படாது பாடல்களை சொல்லலாம். ஆனால், வாலி எதையும் மறுத்து பேசவில்லை. கேட்பதை கொடுக்கிறேன் என்பதுடன் நிறுத்திக்கொள்வது அவர் வழக்கம். அதோ அந்த பறவை எழுதிய கண்ணதாசன் தான் எழந்தபழம் எழந்தபழம் என்று எழுதினார். இதில் கவிஞர்களை மட்டும் குறை கூறுவது சரியல்ல என்று தான் தோன்றுகிறது!
வாலியின் சமூக அக்கறை:
“ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்…”
இன்றைய மீனவர்கள் வாழ்க்கை வரை இந்த பாடல் பொருந்தத்தான் செய்கிறது.
“மாலை நிலா ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை…”
இந்த பாடலை விட பொதுவுடைமை பேசும் பாடல் வேண்டுமா?
“பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதினாலே
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதினாலே
ஏன் என்று கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்று எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை…”
இப்படி எவ்வளோவோ பாடல்கள்…
“உன்னை அறிந்தால்,
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்…
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழ வேண்டும்”
என தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்கள் பல வாலியின் வரிகளில் இருக்கிறது. (இவை பல கண்ணதாசனின் வரிகள் என்று மக்கள் நினைப்பது ஒரு வேதனை தான்!)
வாலியும் இலக்கியமும்:
தமிழ் சினிமா பாடல்களை தாண்டி, வாலியின் பங்களிப்பு தமிழ் இலக்கியத்திற்கு முக்கியமானது. குறிப்பாக பக்தி இலக்கியத்திற்கு அவர் பங்கு குறிப்பிடத்தக்கது. அவதார புருஷன், கிருஷ்ண விஜயம், பாண்டவர் பூமி என நிறைய நூல்களை இயற்றியுள்ளார்…
அப்போது வாலி ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவர். அப்போதுதான் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு ஒரு புதிய அதிகாரி வந்திருந்தார். அவர் ஒரு பிரபல எழுத்தாளர் என்று கேள்விப்பட்டிருந்தார். ஒரு வசனக் கவிதையை எழதி, அவரிடம் எடுத்துக்கொண்டு போனார் வாலி. `இதைப் படித்து எனக்கு கவிதை எழுத வருகிறதா? என்று நீங்கள் சொல்ல வேண்டும்’ என்றார்.
கவிதை இதுதான்.
கடலில் இருந்து
கொள்முதல் செய்த தண்ணீரில்
மூன்று அங்குல அளவு
இன்று-
மேகம் பூமிக்கு வழங்கலாம்
என்று வருண தேவன்
ஆணையிட்டுச் செய்த கையெழத்துதாந்
அதோ!
அந்த மின்னல்!
படித்துவிட்டு,`படவா ராஸ்கல்! இது நீ எழுதின கவிதை தானா? என்றார் அந்த அதிகாரியான எழுத்தாளர். தான் எழுதியதுதான் என்று சத்தியம் செய்தான் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு ஷார்ட்டண்ட், டைப்ரைட்டிங்க் படித்துக்கொண்டிருந்த வாலி.
உடனே அந்த எழுத்தாளர், `தமிழ்தான் உனக்கு சோறு போடும்; ஆனா அது எப்ப போடும்னு சொல்ல முடியாது! நிறுத்தாதே… ’’அன்று அப்படி சொல்லி வாலி என்கிற பூனைக்கு மணி கட்டியவர் புதுக் கவிதையின் தந்தை என்று போற்றப்படும் ந.பிச்சமூர்த்தி.
ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட வாலி, ஆனந்த விகடனில் வரியும் ஓவியர் மாலியின் தீவிர ரசிகர். அவரின் மேல் உள்ள பற்றில் தான் தன் பெயரை வாலி என மாற்றிகொண்டார்.
கவிஞர் கண்ணதாசன் இறந்த போது வாலி எழதினார்
உன் மரணத்தால்
ஒர் உண்மை புலனாகிறது
எழுதப் படிக்கத் தெரியாத
எத்தனையோ பேர்களில் –
எமனும் ஒருவன்;
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான்.
இந்த கடைசி வரிகள் இன்று வாலிக்கும் பொருந்தும்…!
நன்றி : ராஜராஜன் ராஜமகேந்திரன்